3/6/08

சுஜாதா 1935-2008. சில நினைவுகள்.

இந்தப் பதிவில் சுஜாதாவின் எழுத்திலும் கருத்திலும் உதித்த முத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

சுஜாதா கேள்வி பதில்:

டான் பிரவுனின் ‘டாவின்சி கோட்’ படித்தீர்களா? தமிழில் ஏன் அது மாதிரியான புது நாவல் முயற்சிகள் வருவதில்லை? _ஜி. ஜோசப்ராஜ், புதுக்கோட்டை.

தமிழில் அவ்வகையான நாவல்கள் எழுத உலகப்புகழ் பெற்ற ‘லாஸ்ட் சப்பர்’ போன்ற சித்திரம் தமிழ்நாட்டில் வேண்டும். ஐகனா கிராஃபி பற்றிய ஆராய்ச்சி தெரிந்தவர்கள் வேண்டும். அவர்களுக்கு ஜெட் வேகத்தில் செல்லக் கூடிய தமிழ் நடை வேண்டும். நிறைய நிறைய ஓய்வும் பண பலமும் வேண்டும். டாவின்சி ரேஞ்சுக்கு இல்லாவிட்டாலும் சிப்பாய் கலகத்தை ஆராய்ச்சி செய்து அதில் ஒரு தமிழன் கலந்து கொள்வதாக ‘கருப்பு சிவப்பு வெளுப்பு’ என்ற தொடர்கதை ஆரம்பித்தேன். ‘கையை வெட்டுவேன் நிறுத்து’ என்றார்கள். எனக்கு இடது கையால் ஷேவ் செய்து பழக்கமில்லாததால் நிறுத்தி விட்டேன். என்னதான் ‘ரத்தம் ஒரே நிறம்’ என்று எழுதினாலும் ஆரம்ப உற்சாகத்தை இழந்துவிட்டேன்.
ஒரு யோசனை தோன்றுகிறது, ராஜாரவிவர்மாவின் லட்சுமி சரஸ்வதி சித்திரங்களுக்கு யார் மாடலாக உட்கார்ந்தார்கள் என்று ஆராய்ந்து ஒரு நாவல் எழுதலாம்.

நீங்கள் ஏன் தொலைக்காட்சித் தொடர்களுக்கு கதை எழுதுவதில்லை? _மலர்க்கொடி, காஞ்சிபுரம்.
அன்மையில் ‘சித்தி’ பாஸ்கருடன் பேசிக்கொண்டிருந்தேன். தொலைக்காட்சித் தொடர் என்பது பாசஞ்சர் ரெயில் போல என்றேன். அவர், ‘அதுமட்டும் இல்லை, எப்ப வேணா டராக் மாத்தலாம், யாரை வேணா நிறுத்தி இறக்கி விடலாம். மறுபடியும் ஏத்திக்கலாம். மெல்லப்போகும் பாசஞ்சர்’ என்றார். ‘உங்களுக்கு வராது’ என்றார். என் 24 ரூபாய் தீவை சினிமாவாக எடுக்கப் போகிறார்.

‘ஏழரை நாட்டுச் சனி’ என்கிறார்களே.. அவை எந்தெந்த நாடுகள்? _ஆ.கேசவன், இனாம்மணியாச்சி

ஏழரை ஆண்டுகள் என்றுதான் கேள்விப் பட்டிருக்கிறேன். கேசவன், இனி இவ்வகை கேள்விகளை முருகு ஜோதிடம், உஸ்மான் ரோடு, சென்னை_17க்கு அனுப்பவும்.
சனி பிடித்த நாடுகளின் லிஸ்ட் வேண்டுமெனில் இதோ. ஈராக், ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியா சோமாலியா, ருவாண்டா, மியான்மர், பங்களாதேஷ். அரைநாடு, நேப்பாளம்/காஷ்மீர் மாறி மாறி.

தொப்புள் எப்போதுமே பெண்ணின் கவர்ச்சிப் பிரதேசமா? சங்க இலக்கியங்கள் என்ன சொல்கின்றன? _கேள்விப்பிரியன், ஈரோடு.

கேள்விப் பிரியனுக்கு, தங்கள் கேள்வியின் உள்நோக்கம் புரிகிறது. இதை சாக்காக வைத்துக் கொண்டு குமுதம் ஐந்தாறு நாபிகளை க்ளோசப்பில் போடுவார்கள் என்றுதான் கேட்டிருக்கிறீர்கள். சங்க இலக்கியத்தில் தாவரங்கள், மரங்கள் கீரைவகைகள் என்று பலர் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். சங்க இலக்கியத்தில் தொப்புள் என்று யாராவது எம்.ஃபிலுக்கு பதிவு செய்திருக்கிறார்களா? தெரியவில்லை.
ஆண்டாள், நாச்சியார் திருமொழியில் ‘‘குழலழகர், வாயழகர், கண் அழகர் கொப்பூழில் எழுகமலப் பூவழகர்’ என்று முதன்முதலாக தொப்புள் வருகிறது. இந்தத் தொப்புள் அரங்கனின் தொப்புள்.

நாயகனைவிட தமிழில் சிறந்த படங்களேஇல்லையா? ‘டைம்’ பத்திரிகை உலகில் நூற்றில் ஒன்றாக அதனைத் தேர்ந்தெடுத்திருக்கிறதே? என் லிஸ்ட்டில் மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’, ருத்ரையா வின் ‘அவள் அப்படித்தான்’, பாரதிராஜாவின் ‘முதல் மரியாதை’ இருக்கின்றன. உங்கள் டாப் டென் படங்கள் என்ன? _குமரன், பட்டுக்கோட்டை.

இப்படி ஆளுக்கு ஆள் லிஸ்ட் மாறத்தான் செய்யும். ‘டைம்’ போன்ற பத்திரிகைகள் பலரைக்கேட்டு கருத்துக் கணிப்புச் செய்து பெரும்பான்மையினர் கருத்தை பட்டியலிடுகின்றன. அவர்கள் அன்ஜெலினா ஜோலியை உலகத்திலேயே சிறந்த அழகி என்கிறார்கள். உங்களைக் கேட்டால் பட்டுக்கோட்டை குமரன், பக்கத்து வீட்டுக் குமரி யாரையாவது சொல்வீர்கள் Everything is relative.

அறிவியலில் நீங்கள் லேட்டஸ்ட்டாய் வியப்பது என்ன? _சுகுமார், திருவல்லிக்கேணி.

அண்மையில் ஒரு குழந்தையின் முதல் வருஷப் பிறந்த நாள் விழாவுக்குச் சென்றிருந்தேன். பதினெட்டு ஆண்டுகள் கழித்துப் பிறந்த குழந்தை இன்விட்ரியோ முறையில். அழகான குழந்தை. பெற்றோருக்கு அத்தனை மகிழ்ச்சி! மெல்ல மெல்ல இதன் எதிர்கால சாத்தியங்களை எண்ணிப் பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது. க்ளோனிங் சீக்கிரத்திலேயே வரலாம்… ‘எனக்கொரு மகன் பிறப்பான். அவன் என்னைப் போலவே இருப்பான்’ என்று வாலி பாடியது அப்படியே வரப்போகிறது.

‘தமிழைவிட சமஸ்கிருதம் உயர்வானது’ என்று சொல்லும் ஜெயகாந்தனின் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு உண்டா? _ஜானகிராமன், திருநெல்வேலி

ஜெயகாந்தன் எக்ஸாட்டாக என்ன சொன்னார் என்பதை முதலில் கண்டுபிடியுங்கள். ஆளாளுக்கு அவரவர் கருத்துக்களை ஜேகேயின் மேல் இதுதான் சமயம் என்று திணிக்கிறார்கள். எந்த எழுத்தாளனும் தான் எழுதும் மொழியைவிட மற்ற மொழி உயர்ந்தது என்று சொல்லமாட்டான். மேலும் சமஸ்கிருதத்தில் ‘சிலநேரங்கள்’ எழுதமுடியாது.

கே: நீங்கள் யாருக்கு தொண்டன், யாருக்கு தலைவன் ?

பதில்: என்னை வியக்கவைக்கும் புத்தகங்களை எழுதியவர்களுக்கெல்லாம் தொண்டன்; ஒரு எறும்புக்கு கூட தலைவனாக என்னால் இருக்க முடியாது.

சுஜாதா பற்றி ரா.கி. ரங்கராஜன் ஜூவி கட்டுரை: excerpts

நேற்றுதான் நடந்தது போலிருக்கிறது... தபாலில் வந்திருந்த சிறுகதைகளைப் படித்துக்கொண்டு இருந்ததும், ஃபுல்ஸ்கேப் பேப்பரில் பொடிப் பொடியாக எழுதப்பட்டிருந்த ஒரு கதையைப் படித்துக்கொண்டு இருந்ததும்! என்ன நடை, என்ன உத்தி, என்ன ட்விஸ்ட் என்று பிரமித்தவனாக எங்கள் ஆசிரியர் எஸ்.ஏ.பி&யின் அறைக்கு ஓடிச்சென்று, ''ஒரு பிரமாதமான கதை... டெல்லியிலிருந்து ரங்கராஜன் என்ற ஒருவர் எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்''
என்கிறேன். ''அவ்வளவு பிரமாதம் என்றால் பிரஸ்ஸ§க்கு அனுப்புங்கள். பிறகு பார்க்கிறேன்'' என்கிறார். 'சசி காத்திருக்கிறாள்' என்ற அந்தக் கதையை, இதழ் வெளியான பிறகு அவர் படித்துப் பார்த்துவிட்டு, ''மணியார்டர் அனுப்பி விட்டீர்களா?'' என்கிறார். இல்லையென்று நான் சொன்னதும், ஃபாரத்தைக் கொண்டு வரச் சொல்லி, கூப்பனில் நான் எழுதியிருந்த வரிகளின் கீழே, 'கதை ரொம்ப நன்றாக இருக்கிறது. அடிக்கடி எழுதுங்கள்' என்று தன் கைப்பட எழுதி, அன்பளிப்பு 20 ரூபாய் என்றிருந்ததை அடித்து, 30 ரூபாய் என்று திருத்தியதும் கண்ணீருக்கு நடுவே ஞாபகம் வருகிறது.
'எஸ்.ரங்கராஜன், வெறும் ரங்கராஜன், சுஜாதா ரங்கராஜன்' என்றெல்லாம் அவர் பெயரை மாற்றி மாற்றிப் போட்ட பின், கடைசியாக சுஜாதா என்ற பெயரை மட்டுமே நிலைநாட்டினேன்.

சுஜாதா பற்றி பாலகுமாரன்

கவிதையில் உள்ள ஆளுமை போல சிறுகதையில் வரவில்லை. சிறுகதை சிந்திப்பது எப்படி என்று தெரியவில்லை என்று நான் கேட்க, இது ஒன்றும் கடினம் இல்லை. நான் சொல்லித் தருகிறேன் என்று சொல்லி ஒரு நேரம் குறிப்பிட்டார்.
நானும், அமரர் சுப்ரமணியராஜூவும் அவருடைய தமையனார் வீட்டிற்கு அருகே உள்ள இடத்தில் காத்திருந்தோம்। எழும்பூரில் டாக்டர் நாயர் பாலத்திற்கு போகும் முன்பு ஒரு சிறிய புல் திடல் இருந்தது। அந்த புல் திடலில் நின்றபடி வெகு நேரம் இலக்கியம் பேசினோம். மறுபடியும் சிறுகதை எழுதுவது எப்படி என்று கேள்வி கேட்க, முதல் வாக்கியத்திலேயே கதையை ஆரம்பித்து விட வேண்டும்.
"நான் ஜன்னலுக்கு அருகே நின்று கொண்டு தலை வாரிக் கொண்டிருந்தேன்। தெருவில் ஒருவன் நடந்து போய் கொண்டிருந்தான். அவனுக்கு தலையே இல்லை" .இது முதல் பேரா.
அடுத்த பேராவில் "அவன் தலையில் ஒரு பானையை கவிழத்து கொண்டு போய் கொண்டிருந்தான்।" என்று எழுது அல்லது "அவன் தலை வெட்டப்பட்டு விட்டது. முண்டம் மட்டும் நடந்து போய் சுருண்டு விழுந்தது" என்று எழுது. முதல் வகை நகைச்சுவை கதை. இரண்டாவது துப்பறியும் கதை. வேறு ஏதாவது விதமாகவும் கூட இதை எழுதலாம். ஆனால் முதல் பேராவில், முதல் வாக்கியத்தில் கதை ஆரம்பித்து விட வேண்டும்.
பொல பொலவென்று பொழுது விடிந்தது. “சார் போஸ்ட்” என்ற சத்தம் கேட்டது. நாளை விடிந்தால் தீபாவளி என்றெல்லாம் எழுதாதே என்று சொல்லிக் கொடுத்தார். என்ன சொல்லப் போகிறோம், எப்படி சொல்லப் போகிறோம் என்று யோசி என்று விவரித்துக் கொடுத்தார். எனக்கு அந்த சந்திப்பு மிக உபயோகமாக இருந்தது.
பிற்பாடு ஒரு கூட்டத்தில் அவர் இருந்த போது அவர் முன்னிலையில் “எனக்கு எழுத சொல்லிக் கொடுத்தது திரு. சுஜாதா அவர்களே” என்று நான் நன்றியோடு இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த போது, அவர் மெல்ல எழுந்து வந்து என்னிடமிருந்து மைக் வாங்கி, “நான் ஒரு நூறு, நூற்றைம்பது பேருக்கு எழுத சொல்லிக் கொடுத்தேன். ஒரே ஒரு பாலகுமாரன் தான் புரிஞ்சிண்டான். கத்துக் கொடுக்கிறது ஒன்றும் பெரிய விஷயம் இல்ல. கத்துக்கறது தான் பெரிய விஷயம்” என்று சொன்னார். கூட்டம் கை தட்டி பெரிதாக ஆரவாரித்தது. கூட்டம் முடிந்த பிறகு எனக்கு சொல்லிக் கொடுங்கள். எனக்கு சொல்லிக் கொடுங்கள் என்று பல இளைஞர்கள் திரு. சுஜாதாவை சூழ்ந்து கொண்டார்கள். திரு. சுஜாதா பல பேருக்கு பலதும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

சுஜாதாவின் பல படைப்புகளை புத்தக வடிவில் தந்ததற்கும் அவருடைய வலைமனையில் தொடுக்கப்பட்டுள்ள சுஜாதா செய்திகளுக்காகவும் தேசிகன் அவர்களுக்கு இந்த ரசிகனின் மனப்பூர்வமான நன்றி.

No comments: