2/10/09

கனவுகளே...

பகற்கனவு காண்பது தவறு என்பது அன்று முதல் இன்று வரை நிலவும் தப்பான கருத்தாகும். கனவு இல்லையெனில் கற்பனை இல்லை: கற்பனை இல்லை எனில் முயற்சி இல்லை; முயற்சி இல்லை எனில் புதுமை இல்லை. புதுமையும் முயற்சியும் இல்லை எனில் முன்னேற்றம் இல்லை என்பது என் கருத்து. குழந்தைகளை நாம் கனவு காண விடுவதே இல்லை. ஒருங்கிணைக்கப்பட்ட தினசரி கடமைகளால் (daily organized tasks) கனவுகள் உருவாகாமல் அழிக்கப்படுகின்றன. நான் இளமைப் பிராயத்தில் கல்லாததை எல்லாம் என் குழந்தை கற்க வேண்டும் என்ற பேரார்வத்தில் கனவு காணும் நேரத்தை நாம் கவலையின்றி காற்றில் விடுகிறோம். பகற்கனவு காண முடியவில்லை எனில் என் வாழ்க்கை நரகம்.

அப்படி ஒரு கனவில் முழ்கி இருந்த ஒரு பெண்ணின் படம் தான் இங்கு உள்ளது. மைசூரில் எதோ ஒரு பெயர் மறந்த தெருவில் காய்கறி விற்கும் இவள் மனதில் ஓடும் எண்ணங்கள்தான் என்ன? வாழ்க்கை, வறுமை, படிப்பு, பசி, சினிமா, சிநேகிதிகள் - இவற்றில் ஏதாவது ஒன்றாவது அவள் மனத்திரையில் ஓடிக்கொண்டு இருக்கும் என்பது என் கணிப்பு.

நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன் நான் எடுத்த இந்த படம் என் நினைவை விட்டு அகலாத ஒன்றாகும்.